( சௌராஷ்டிர சமூகத்தை சார்ந்த தமிழ் எழுத்தாளர் திரு. எம். வி. வெங்கட்ராம் அவர்கள். )
(இக் கட்டுரையின் ஆசிரியர் திரு. மு. சிவகுருநாதன் அவர்கள்)
(சாகித்திய அகாதெமி 22 ஜனவரி 2011 சனியன்று கும்பகோணம் ஜனரஞ்சனி சபாவில் எம்.வி.வெங்கட்ராம் படைப்புகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கை நடத்தியது. அது குறித்த சிறிய பதிவு.
எம்.வி. வெங்கட்ராமுடனான தனது சந்திப்பு, நட்பு பற்றியும் சொல்லி அவரது எழுத்துக்களை சிலாகித்து பேசியவர்களாக வே.மு. பொதியவெற்பன், தேனுகா, தஞ்சை ப்ரகாஷ் ஆகியோர்களை பட்டியலிட்டு எம்.வி.வி. பற்றி இன்னமும் அதிக தகவல்களைக் கொண்டு வந்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது இடைஇடையே அச்செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று சொல்லி ஒரு நீண்ட அறிமுக உரையை இராம. குருநாதன் நிகழ்த்தினார்.
பின்னர் பேச வந்த சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் எம்.வி.வி.யின் நாவலைப் படிக்காமல் சிலப்பதிகாரத்தைப் பற்றி எழுதப்பட்ட நாவல் என்று விமர்சனம் எழுதியதை குறிப்பிட்டு பேசினார். அ. மார்க்ஸ் போன்றவர்கள் தமிழிலக்கியத்தை தலித் இலக்கியம், செட்டியார் இலக்கியம், முதலியார் இலக்கியம் என்றெல்லாம் சாதி ரீதியாக வகைப்படுத்தி வைத்துள்ளனர் என்று வருத்தப்பட்டுக் கொண்டார். தமிழில் இப்படியெல்லாம் அணுகும் போக்கு உள்ளது என்பதை ‘கண்டுபிடித்து’ வெளிப்படுத்தினார்.
மேலும் இந்திய இலக்கிய சிற்பிகள் நூல் வரிசையில் எம்.வி.வி.யைப் பற்றிய நூல் ஒன்றை தேனுகாவை எழுதித் தருமாறும் அதை சாகித்திய அகாதெமி கண்டிப்பாக வெளியிடும் என்றும் அறிவித்தார். எம்.வி.வி.யின் நாவல்கள் மற்றும் படைப்புகள் பற்றி வந்துள்ள விமர்சனங்களை குறிப்பிட்டு சிற்பி பேசி முடித்தார்.
மைய உரையாற்றிய சாகித்திய அகாதெமி பொதுக்குழு மற்றும் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் இரா. மோகன், பி.எஸ். ராமையா எப்படி எம்.வி.வி.க்கு வழிகாட்டினார் என்பதைத் தெரிவித்தார். தி.ஜா., கு.ப.ரா., க.நா.சு. போன்ற சமகால எழுத்தாளர்களோடு எம்.வி.வி.யைத் தொடர்புப்படுத்தி தனது பேச்சை நிறைவு செய்தார்.
சிறப்பு விருந்தினர்களின் உரைக்குப் பிறகு நன்றியுரை சொல்ல வந்த ரவி சுப்பிரமணியன் எம்.வி. வெங்கட்ராமுடன் உள்ள தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அவரைப் பற்றிய ஆவணப் படம் எடுப்பதற்கு நிறைய செலவு பிடிக்கும். எனவே சாகித்திய அகாதெமி உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
முதல் அமர்வில் தலைமையேற்ற அ. மார்க்ஸ், கும்பகோணத்தில் நாங்கள் நெருங்கி உறவாடிய எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு என்றும் அவர் அளவிற்கு இல்லையென்றாலும் எம்.வி.வி.யுடனும் தொடர்பு இருந்ததைக் குறிப்பிட்டுப் பேசினார். இவரது படைப்புகளில் ‘காதுகள்’ தம்மை ஈர்க்கவில்லையயன்றும் ‘நித்ய கன்னி’, ‘வேள்வித் தீ’ போன்றவற்றை சிறந்த படைப்புகளாக பார்ப்பதாகவும் கூறினார்.
எம்.வி.வி. பாரதத்தின் மேல் அதிக ஈடுபாடு கொண்டவர். தமிழ்ச் சூழலில் கம்பராமாயணம் பேசப்பட்டதைப் போல வியாசபாரதமோ, நல்லாபிள்ளை பாரதமோ பேசப்பட்டதில்லை. பாரதத்தின் மீது அதீத பற்றுடைய எம்.வி.வி. முயன்றிருந்தால் தமிழுக்கு ஒரு அருமையான பாரதம் கிடைத்திருக்கும் என்றார்.
1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சூழலில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எம்.வி.வி., அத்வானியை சந்தித்ததையும் குறிப்பிட்டு இந்துத்துவத்துடன் இணக்கமாக இருந்த எழுத்தாளர் என்று சொல்லி அதற்கான காரணத்தையும் சொன்னார்.
தமிழ்நாட்டில் சிறுபான்மை சமூகமான செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த எம்.வி.வி.க்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இன்றும் கூட செளராஷ்டிரா மொழிக்கு வரி வடிவம் இல்லை. அவர்களது மொழி கூட பலரால் கிண்டல் செய்யப்படுகிறது. இவர் தனது இறுதிக் காலத்தில் செளராஷ்டிரா மொழிக்கு வரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்தப் பின்னணியில் அவரது அடையாள அரசியலையும் இந்துத்துவத்தின்பால் அவர் சாய நேர்ந்ததையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
(அவரின் வரி வடிவம் காணும் முயற்சிக்கு சௌராஷ்டிர மத்ய சபை வெற்றி கண்டு விட்டது. 2008 இல் பாளையங்கோட்டையில் மத்திய அரசின் உதவியோடு எழுத்துக்கள் பெறப்பட்டு முன்னாள் தமிழக சபாநாயகர் திரு. ஆவுடையப்பன் கரங்களால் வெளியிடப்பட்டன. )
நன்றி : சிவகுருநாதன் அவர்களுக்கு. அவரின் தொடர்பு முகவரி :
http://musivagurunathan.blogspot.com/2011/01/blog-post_26.html
No comments:
Post a Comment