Friday, July 28, 2023

தேங்காய் இலவசம்

 தேங்காய் இலவசம் 

தமிழாக்கம் : தெஸ்வான் பாஸ்கர் சேலம்.  

(சௌராஷ்டிர கிராமிய கதைகள்)



பீதான் பாவிற்கு (बीदान्  बा ) ஒரு நாள் தேங்காய் துருவல் பகிரி / भगिरि சாப்பிடணும்னு ஆசை வந்துட்டது. துருவின தேங்காயோட கொஞ்சம் சர்க்கரையும் சேர்ந்து பகிரி சுட்டு சாப்பிட்டா எத்தனை நல்லா இருக்கும்!”னு பீதான் பா சப்புக்கொட்டினார். 

அவரின் குடும்பப்பெயரான பீதான் என்பதுடன் பா என்ற (ஐயா) சொல்லையும் சேர்த்து மக்கள் அவரை அழைத்தனர்.  

ஆனா ஒரு சின்ன பிரச்சனை. வீட்டுல ஒரு தேங்கா கூட இல்லை "கடைக்குப் போகணுமே” ன்னு தன்னுடைய மனைவி லெட்சும்-பை கிட்ட சொன்னார்.

"உங்களுக்குச் சாப்பிடணும்னா போகத்தான் வேணும்"னு அவ சொன்னாள். இன்னொரு பிரச்சனையும் இருந்தது. காசு செலவழிச்சாகணும். !

பீதான்-பா சரியான கஞ்சன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும் வெளியில் வயக்காட்டுப் பக்கம் போய் ஒரு பெரிய ஆலமரத்துக்கு அடியில உக்கார்ந்து யோசிச்சார். "என்ன செய்யலாம். என்ன செய்யலாம்."தேங்காய்த் துருவலப் பத்தி நினைக்க நினைக்க வாயில தண்ணி ஊற ஊற பீதான் பாவுக்குத் தாங்க முடியல. வீட்டுக்கு வந்து லெட்சும்-பை கிட்ட சொன்னார்...

"கடைக்குப் போயி தேங்கா என்ன வெல விக்கறதுன்னு பாத்திட்டு வரேன்." செருப்பை மாட்டிக்கிட்டு கைத்தடியையும் தூக்கிக்கிட்டு பீதான் பா கிளம்பினார்.

சுறுசுறுப்பா இருந்த கடைத்தெருவிலே பீதான் பா மேலும் கீழுமா நடந்தார். இது என்ன வெல, அது என்ன வெலன்னு கேட்டபடி கடைசியில் ஒரு தேங்காய் வியாபாரிகிட்ட வந்தார். 

"ஏம்பா, இது என்ன வெல?"ன்னார் பீதான் பா "ரெண்டு ரூபாய்தான் ஐயா"ன்னார் தேங்காய் வியாபாரி. ரெண்டு ரூபாயா? பீதான்-பாவுடைய கண் அதிர்ச்சியிலே பெரிசாப் போச்சு.

"அது ரொம்ப ஜாஸ்தி, ஒரு ரூபாய்க்குக் கொடு."

"முடியாதய்யா ஒரு தேங்காய் ரெண்டு ரூபாய்தான் வேணும்னா எடுத்துக்குங்க. வேண்டாம்னா வெச்சுடுங்க"ன்னார் தேங்காய் வியாபாரி. "சரி சரி"ன்னார் பீதான் பா. "ஒரு ரூபாய்க்கு எங்க கிடைக்கும்னு உனக்குத் தெரியுமா?"

"கொஞ்ச தூரம் போனீங்கன்னா ஒரு பெரிய கடைத்தெரு வரும். அங்க ஒரு வேளை கிடைக்கலாம்."

பீதான் பா கிளம்பினார் அங்கே போனாப் போச்சுன்னு தனக்குள்ள சொல்லிக்கிட்டார். "கொஞ்சம் நடந்த மாதிரியும் இருக்கும். ஒரு ரூபாயும் மிச்சம்." கைத்தடிச்சத்தம் போட்டபடி நடந்தார்.

பெரிய கடைத்தெரு ஒரே சந்தடியாய் இருந்தது. "படாட்டா உருளை! படாட்டா உருளை! காந்தா வெங்காயம்! காந்தா வெங்காயம்! காஜர் கேரட்! காஜர் கேரட்! கோபி-கோஸ்! கோபி-கோஸ்!'

பீதான் பாவுக்கு வியர்த்துப் போச்சு. "ஏ தேங்காக்காரரே, தேங்கா என்ன வெல"ன்னார். "ஒரு ரூபாய்தான் ஐயா எடுங்க சீக்கிரம்”ன்னு தேங்காய் வியாபாரி அவசரப்படுத்தினார்.

"அச்சீன் பா, என்னப்பா இது!" அப்படின்னார் பீதான் பா. "நா இவ்வளவு தூரம் வந்திருக்கேன் நீ ஒரு ரூபாய் சொல்றியே இதுக்கு அம்பது காசுதான் கொடுக்கலாம். இந்தா அம்பது காசு இந்தத் தேங்காயை எடுத்துக்கறேன்.''

தேங்காய் வியாபாரியான அச்சீன் பா,  அவர் கையிலிருந்த தேங்காயைப் பிடுங்கிக்கிட்டார். "மன்னிச்சுக்குங்க. ஒரு ரூபான்னா ஒரு ரூபாதான்" பீதான் பாவுடைய முகம் போன போக்கைப் பார்த்து "துறைமுகத்துக்குப் போங்க அங்க ஒருவேளை அம்பது காசுக்குக் கிடைக்கலாம்"ன்னு சொன்னார்.

"அம்பது காசுன்னா அம்பது காசு" ன்னு பீதான் பா தனக்குள்ள சொல்லிக்கிட்டார். "துறைமுகத்துக்கு நடந்தா போச்சு கால் ஒண்ணும் வலிக்கல்லே." பீதான் பா நடக்க ஆரம்பித்தார் நடுநடுவில் நின்னு நின்னு நடந்தார். ஒரு பெரிய வெள்ளை கைக்குட்டையை பாக்கெட்டிலிருந்து எடுத்து நெத்தியைத் துடைச்சுக்கிட்டார். துறைமுகத்திலே ஒரு படகோட்டி உட்கார்ந்திருந்தான். அவன்கிட்ட சில தேங்காய்கள் இருந்தது. "தேங்காய் எப்படிப்பா?” ன்னு கேட்டார் பீதான் பா "பார்த்தா நல்லா இருக்கு."

"பேஷான தேங்கா"ன்னான் படகோட்டி. "அம்பது காசுதான் ஐயா"

"அம்பது காசா?”ன்னார் பீதான் பா அதிர்ச்சி அடைஞ்சவர் போல. "இவ்வளவு தூரம் நடந்திருக்கேன். களச்சிப் போயிட்டேன். நீ அம்பது பைசாங்கிறே. நா நடந்தே இருக்கமாட்டேன். இருபத்தஞ்சு காசு தாரேன். எடுத்துக்கோ"தேங்காயை எடுக்க பீதான் பா குனிஞ்சார்.

"ஏ கிழவா போடு கீழ" அப்படீன்னான் படகோட்டி. "பேரம் பண்றதெல்லாம் என்கிட்ட வச்சுக்காதே மலிவா வேணும்னா தென்னந்தோப்புக்குப் போ. அங்க உனக்கு வேணுங்கற தேங்காய் கிடைக்கும். நீ கேக்கற வெலைக்கு.''

பீதான் பாவுக்கு களைப்பாய் இருந்தது காலிலே செம வலி இருந்தும் இருபத்தைந்து பைசா லாபம்னா அதை விட மனசில்லை “இத்தனை தூரம் நடந்தாச்சு தென்னந்தோப்பு வரை நடந்தா அது ஒண்ணும் தப்பு இல்லை"ன்னு தனக்குள்ள சொல்லிக்கிட்டார். "வாழ்க்கையிலே எதுவும் இலவசமாய்க் கிடைக்காது."

பீதான் பா தென்னந்தோப்புக்கு வந்து சேர்ந்தார் அங்கிருந்த தோட்டக்காரனைப் பார்த்து "இந்தாப்பா இந்த தேங்காயெல்லாம் என்ன விலை?”ன்னு கேட்டார்

''உங்களுக்கு எது வேணுமோ எடுத்துக்குங்க"ன்னான் தோட்டக்காரன் "எத்தனை பெரிசு பாருங்க இருபத்தஞ்சு காசுதான்'

"கடவுளே! இருபத்தஞ்சு காசா? இவ்வளவு தூரம் நடந்து வந்திருக்கேன் கால் வலிக்குது. இதப் பாரு. எனக்கு ஒண்ணு சும்மா கொடேன் நா ரொம்ப நல்லவன்"ன்னு பீதான் பா கெஞ்சினார்.

"அட பிச்சை கேக்காதீங்க உங்களுக்கு சும்மா வேணும்னா நீங்களே எடுத்துக்குங்க மரம் இருக்கு தேங்காய் இருக்கு நீங்களே ஏறிக்குங்க எத்தனை வேணுமானாலும் பறிச்சுக்குங்க நா பணம் கேட்டது பறிச்சுக் கீழே கொண்டு வந்ததுக்காக நீங்களே பறிச்சீங்கன்னா காசு கிடையாது"

"நிஜமாவா? பீதான் பாவுக்கு ஒரே சந்தோஷம் மரம் ஏறினா எத்தனை வேணுமானாலும் பறிச்சுக்கலாமா?"

தன்னுடைய பைஜாமாவை மேலே சுருட்டி ஜிப்பா கைகளை மடிச்சு விட்டுக்கிட்டு தென்னைமரத்திலே ஏற ஆரம்பிச்சார்.

மரம் நல்ல உயரம் ஏறும்போது தன்னுடைய அதிர்ஷ்டத்தை நினைச்சு பீதான் பா சந்தோஷப்பட்டார். எத்தனை வேணும்னாலும் எடுத்துக்கலாம். காசு கிடையாதுன்னு சொல்லிக்கிட்டார்.

பீதான் பா உச்சாணிக்குப் போயிட்டார். எல்லாத்தையும் விட பெரிசா இருந்த ஒரு தேங்காயைப் பறிக்க கையை நீட்டினார். சரேல்ன்னு அவருடைய கால் வழுக்கிட்டது. பீதான் பா தேங்காயைப் பிடிச்சபடி அந்தரத்திலே தொங்கினார்.

"அய்யய்யோ. இப்ப என்ன செய்யறது”ன்னு பீதான் பா காத்துலே ஆடியபடி அலறினார் கீழே இருந்த தோட்டக்காரனைப் பார்த்து, "தம்பி தம்பி, கொஞ்சம் உதவி செய்யேன்"ன்னார்.

"நல்லாயிருக்கே”ன்னு சொன்னான் தோட்டக்காரன் “நீ காசு கொடுக்கமாட்டே என் உதவி மட்டும் வேணுமா? எதுவும் சும்மா கிடைக்காது சாமி!”  தோட்டக்காரன் மறைந்து போய்ட்டான் ! 

கொஞ்ச நேரம் கழித்து அந்த சமயம் ஒரு ஒட்டகத்து மேல உட்கார்ந்தபடி ஒரு ஆள் போனாள். “ஏய் ஏய், ஒட்டகக்காரா, காப்பாத்து!”ன்னு கத்தினார் பீக்கூபாய். “தொங்குற என்னுடைய காலை மறுபடியும் மரத்தில உக்காத்தி வச்சுடு. உனக்குப் புண்ணியமாப் போகட்டும்"ன்னார்.

ஓட்டகக்காரன் அய்யோ பாவம்னு நினைச்சான். “இந்தக் கிழவனுக்கு உதவறதினால் எனக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லே.” ஒட்டகத்து மேல நின்னுக்கிட்டு கிழவருடைய கால்களைப் பிடிச்சு மரத்திலே வைக்கப் பார்க்கும்போது ஒட்டகம் என்ன செஞ்சது தெரியுமோ? மரத்திலிருந்த பச்சை இலைகளைப் பார்த்ததும் கழுத்தை நீட்டித் தின்ன ஆசைப்பட்டு லேசா நகர்ந்தது.

ஒட்டகத்து மேலிருந்த ஆளுக்கு சறுக்கிட்டது. அவன்தான் "பீதான் பாவுடைய" கால்களை பிடிச்சுக்கிட்டிருந்தானே! இப்போ பீதான் பாவும் அவனும் சேர்ந்து அந்தரத்திலே தொங்கினாங்க.

அந்த வழியா ஒரு ஆள் குதிரை மேல் வந்தான்

“ஏய் ஏய். குதிரைக்காரா, தயவு செய்து உதவி பண்ணு"ன்னு இரண்டு பேரும் சேர்ந்துக் கத்தினாங்க

"என்னுடைய காலை மறுபடி மரத்தில் வச்சுடப்பா உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்"னு பீதான் பா கதறினார்.

"இலங்களுக்கு உதவறதுக்கு ஒரு நிமிஷம்தான் ஆகும்"னு குதிரைக்காரன் நினைச்சான் “என்னுடைய குதிரைமேல் நின்னு தாவினாப் போச்சு"ன்னு அவள் குதிரை மேல நின்னான்

ஒட்டகங்களை விட குதிரைகள் தேவலைன்னு யார் சொன்னது? அதுவும் பசேல்னு புல்லைப் பார்த்தா குதிரை சும்மா விடுமா? குதிரைக் குனிஞ்சு வாய் நிறைய புல்லை எடுக்கப் பார்த்தபோது குதிரைக்காரன் ஒட்டகக்காரனுடைய காலைப் பிடிச்சபடி அந்தரத்திலே தொங்கினான் ஆக, அந்தரத்திலே தேங்காயைப் பிடிச்சபடி பீதான் பா. அவர் காலைப் பிடிச்சபடி ஒட்டகக்காரன் அவங்களோட மூணாவதாய் குதிரைக்காரன் எல்லாரும் தென்னைமரத்திலேந்து தொங்குறாங்க!

குதிரைக்காரன கத்தினான். "ஐயா ஐயா அந்தத் தேங்காயை கெட்டியாப் பிடிச்சுக்குங்க, யாராவது வந்து நமக்கு உதவற வரைக்கும் அத விட்டுப்புடாதீங்க உங்களுக்கு நா நூறு ரூபா தாறேன்."

ஒட்டகக்காரன் கத்தினான். “ஐயா ஐயா நான் உங்களுக்கு இருநூறு ரூபா தாறேன் அந்த தேங்காயை விட்டுப்புடாதீங்க"

"ஒரு நூறு அதோட இருநூறா? ஆத்தாடி முன்னூறு ரூபாயா?"ன்னு வாயைப் பிளந்தார் பீதான் பா “அவ்வளவா ?!அவ்வளவா?!!” பீதான் பாவுக்கு ஏற்பட்ட சந்தோஷத்திலேயும் ஆச்சரியத்திலேயும் என்ன செய்றோம்னு தெரியாம " இவ்ளோ ரூபாயா !" என்று சொல்லி கைகளை அகல விரிச்சார் தேங்காயிலிருந்த பிடி விலகிட்டது.

டமால் மூணுபேரும் - குதிரைக்காரன், ஒட்டகக்காரன், பீதான் பா மூணுபேரும் கீழே விழுந்தாங்க ! பீதான் பா கீழே விழுந்த அதிர்ச்சியிலிருந்து சமாளிச்சுக்கறதுக்குள்ள பொத்துனு ஒரு தேங்காய் அவர் தலையில் விழுந்தது.

இலவசமா !!



No comments: