Thursday, December 9, 2021

சேலம் ஜி எம் ரெங்கன் உடனான எனது அனுபவங்கள்


சேலம் ஜி எம் ரெங்கன் என்றழைக்கப்பட்ட கெந்தபடி முத்துஸ்வாமி அய்யர் - நாகாத்தாயம்மாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்த கெந்தபடி மு. ரெங்கநாயகுலையர் 4.2.1920 ஆம் வருடம் பிறந்தார்.  சமூக சரித்திரத்திலும் ஆன்மிகத்திலும் நிறைத்து இருந்தார்.   உடற்பயிற்சியில் மிக்க ஆர்வம் மிக்கவர்.  கட்டுமஸ்தான உடல் கொண்டவர்.  சௌராஷ்ட்ரா தேசத்தில் கிர்னார் மலையில் வீற்றிருக்கும் பிரம்ம விஷ்ணு மஹேச அம்சமான தத்தாத்ரேயர் நமது குல குரு என்றறிந்தார்.  தத்தாத்ரேயர் வரலாற்றுடன் தொடர்புடைய பரசுராமர் அவரது தாய் ரேணுகா தேவி சரித்திரத்தில் தமிழக சௌராஷ்ட்ரர்கள் சரித்திரமும் தொடர்பு கொண்டு உள்ளது அறிந்தார். 

இதனால்   தமது 21 ஆம் வயதில் ஸ்ரீ தத்தாத்ரேய சேவா சங்கம் என்ற ஸ்தாபனத்தை ஆரம்பித்து வருடந்தோறும் சேலம் கனகராஜகணபதி தெருவில் ரேணுகா தேவி  உற்சவ  பந்தல் அமைத்து விழா கொண்டாடி வந்தார்.  காலப்போக்கில் "கொம்டோ3" எனப்படும் சௌராஷ்ட்ரா சமூக-தலைவர் என்ற பொறுப்பை அடைந்தார்.  

அந்தக்காலத்தில் சமூக மக்களிடையே நடைபெறும் திருமணங்கள் "கொம்டோ3" எனப்படும் சமூக-தலைவர் வீட்டில் வரன், வது வீட்டார் சென்று தலைவருக்கு மரியாதையை செய்து, விவாகத்தை எழுதி பதிவு செய்து ஒப்புகை-சீட்டு பெற்றுக்கொள்ளும் வழக்கம் இருந்தது.  அந்த வகையில் என் அனுபவத்தில் என் இளைய அத்தை விவாகம் அவரது வீட்டில் பதிவு செய்து பின் நடந்தது.  (தற்காலத்தில் சமூக உறுப்பினர்களுக்கு மட்டும் பாத்தியப்பட்ட பெருமாள் கோவில்களில் பதிவு செய்யப்படுகிறது )
இதனால் மிக்க இளைய வயதிலிருந்தே அவர் எனக்கு அறிமுகமானார். 

அவர்க்கு சரஸ்வதி அம்மாள் என்பவருடன் விவாகம் நடந்தது. 

சமூக வளர்ச்சியில் மிக ஆர்வம் காட்டியதால் "சமூக சேவா துரந்தரர்" என்ற பட்டம் பெற்றார்.  சிறுபான்மை மொழியாக உள்ள சௌராஷ்ட்ரா மொழி வளர்ச்சியில்  ஆர்வம் கொண்டதால் "சௌராஷ்டிரா தாத்தா" என்ற பட்டமும் பெற்றார்.

அவரது வீட்டில் தான் ஜப்பானில் இருந்து சௌராஷ்ட்ரா மொழி ஆய்வு செய்து வந்த உசித நோரிஹிகோ  என்பாரது அறிமுகம் எனக்கு கிடைத்தது.  

சேலம் வட்டார சௌராஷ்ட்ரா மொழியின் வார்த்தைகளை அவருக்கு ஜி எம் ரெங்கன் வீட்டில் நடந்த சந்திப்பில் இருமுறை தெரிவித்து இருக்கிறேன்.  இரண்டாவது சந்திப்பின்போது செய்வாய்ப்பேட்டை கே கே திருமால்ராவ்-ம் உடன் கலந்து கொண்டு அவரது ஆய்விற்கு பல சௌராஷ்ட்ரா மொழி வார்த்தைகளை தெரிவித்தோம்.  
கர்நாடக சங்கீதம் மூலம் மோட்சம் அடைந்த ராம பக்தர் தஞ்சாவூர், திருவையாறு தியாகய்யர் அவர்களின் சிஷியர்  சௌராஷ்டிரா வெங்கட்ராமண பாகவதர் அவர்களின் வரலாற்றினை புத்தகமாக வெளியிட்டார்.  

சௌராஷ்ட்ரா முரசு என்ற மாதாந்திர புத்தகத்தினை நடத்தினார்.  

சேலத்தில் நடன கோபால நாயகி சமாஜம் என்ற அமைப்பினை நடத்தி வந்தார். 1) சுகந்த தூப தீர்த்தார்யார், 2) சேலம் மஹாகவி அழகரார்ய ஸ்வாமி, 3) மதுரை கோவிந்தாச்சா ஸ்வாமி, 4) பக்த விட்டல தாஸ் ஸ்வாமி, 5) சேலம் கலியுக நவபாஷாண சித்தர், பழனி முருகன் சிலைக்கு மாற்றாக தமிழக முதல்வர் எம் .ஜி ராமச்சந்திரன் காலத்தில் சிலை செய்வோரை  தேர்ந்தெடுக்க முருகன் சன்னதியில் திருவுள சீட்டு போட்டு கேட்ட போது பழனி முருகன் சன்னதியில் தெரிந்திடுக்கப்பட்ட சக்திதாஸ் நரசிம்மானந்தா அவர்களின் வரலாறு 6) தெலுங்கு எழுத்தில் இருந்த அழகரார்யாவின் நௌகா சரித்ரு தமிழ் எழுத்து பதிப்பு  போன்ற பல புத்தகங்களை எழுதி உள்ளார். 

சௌராஷ்ட்ரா மொழி எழுத்தாளர்கள், மதுரை பாஷாபிமானி டி வி குபேந்திரன், தாடா. சுப்பிரமணியன், கசின் ஆனந்தம், திருபுவனம் எம் எஸ் ரமணி, அடியேன் சேலம் தெஸ்வான் பாஸ்கர் உள்பட அவருக்கு பலருடன் நல்ல நட்பு இருந்தது.  

2007 ஆம் வருடம் அவரது வீட்டில் சௌராஷ்ட்ரா மொழிக்கான லிபி பற்றி விவாதித்தோம்.  என் வரலாற்று அறிவின்படி தேவநாகரி எழுத்து தான் சௌராஷ்ட்ரா மொழிக்கு பொருந்துகிறது என்று தெரிவித்தேன்.  ஆயினும் அவர் நமக்கென ஒரு தனி லிபி இருந்தால் கௌரவமாக இருக்கும் !? என்று ராமராய் லிபியை  தமது புத்தகங்களில் ஓரிரு பக்கங்களில் போட முயற்சிப்பார்.  

பின்னர் தேவநாகரி எழுத்து நம் எழுத்து என்பதனை ஏற்றுக்கொண்டார்.  இதன் பின் நமது 64 கோத்திர ரிஷிகளின் முழு வரலாற்றையும்  புத்தகமாக எழுத ஆவல் கொண்டு அது சம்பந்தமாக விவரங்களை கொடுக்குமாறு என்னை பணித்தார்.  

பல அரிய புத்தகங்களை அவரிடம் தேடி கொடுத்தேன்.  இந்த காலகட்டத்தில் அவரது உடல் நலிவடைந்து 
 5.2.2010 அன்று காலமானார்.  

அவரது கனவான 64 கோத்திர ரிஷி புத்தகம் திருச்சி பாதே ஹரி அவர்கள் மூலமாக நிறைவேறி உள்ளது.  யார் எந்த கர்மா செய்யவேண்டும் என்று கடவுள் விரும்புகிறாரோ  அவர் தானே செய்யமுடியும் !?