Friday, January 4, 2019

சௌராஷ்ட்ரா மொழித்திறன் மேம்பாடு - Development of Sourashtra Language skill

&


சௌராஷ்ட்ரா மொழித்திறன் மேம்பாடு.  அப்படி என்றால் என்ன ? என்று சாதாரணமா எல்லோருக்கும் சந்தேகம் வரும்.  நாம் குஜராத்தில் உள்ள சௌராஷ்ட்ரா தேசத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் என்று பரம்பரையாக  கூறிக்கொள்கிறோம்.  ஆனால் இன்றைய தேதியில் ஒருவர் குஜராத்திற்கு சென்று தமிழகத்தில் நாம் பேசும் சௌராஷ்ட்ரி மொழி பேசினால் அங்கு யாருக்கும் விளங்குவது இல்லை.  அவர்கள் பேசும் குஜராத்தியும் நமக்கு விளங்குவது இல்லை.    காரணம் என்ன ?  
மொழி என்பது தனது நடையில் மாறிக்கொண்டே இருப்பது என்று பல மொழியியல் அறிஞர்களின் கூற்று. காலம் மற்றும் மனித முன்னேற்றத்திற்கான கண்டுபிடிக்கப்புகள் மற்றும் செயல்பாடுகள் மொழிநடையை மாற்றிக்கொண்டே இருக்கிறது. அப்படி காலத்திற்கு ஏற்ப உலகில் உள்ள எல்லா மொழிகளும் மாறிக்கொண்டு தான் உள்ளன.  நாம் இன்று தமிழகத்தில் பேசிக்கொண்டு இருக்கும் சௌராஷ்ட்ரி மொழி வார்த்தைகள்  சுமார் ஆயிரம் ஆண்டுகள் முன்பு பயன்படுத்திய அதே வடிவம். ஆனால் மொழி நடை மாறி விட்டது.  இது குஜராத்தி மொழிக்கும் பொருந்தும். குஜராத்தி மொழியும் மொழி நடையை மாற்றிக்கொண்டு உள்ளது.

குஜராத்தி மொழியின் மொழி நடை மாறக்  காரணம், அம்மொழியில் எழுந்த இலக்கியங்கள்.  தமிழக சௌராஷ்ட்ரியின் மொழி நடை மாற காரணம் பிற மொழி தாக்கம் மற்றும் தமிழ்த்  திரைப்படங்கள்.    தமிழ் மொழியின் நடை தமிழக சௌராஷ்ட்ரி மொழியில் அதிக தாக்கம் கொண்டதாக உள்ளது.  இதனால் குஜராத் சென்று சௌராஷ்ட்ரி மொழி ஒப்பீடு செய்வது பெரும் சிரமங்களை சந்திக்கிறது.
தமிழகத்தில் வாழும் சௌராஷ்ட்ரா மொழி பேசுவோர், ஆரம்ப கட்டத்தில் தெலுகு பேசும் மொழிப் பெரும்பான்மையினர் நடுவில் வசித்தபோது தெலுகு மொழி நடை சௌராஷ்ட்ரா மொழியில் தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியது.  உதாரணமாக இட்லி என்ற வார்த்தை உக்குடும்  என்று தெலுங்கில் இருக்கும்.  இதனை சௌராஷ்ட்ரா மக்கள் தங்கள் மொழியில் இட்லி க்கு இணையான வார்த்தையான அப்ப என்ற பெயரில்  கூறத்துவங்கி பின்னர் உக்குடும் அப்ப  என்று ஒன்று சேர்த்து அழைத்து பின்னர் உக்கூடும் என்றே சௌராஷ்ட்ரி மொழி பேசுவோர் குறிப்பிட துவங்கினர்.  பின்னர் கால ஓட்டத்தில் தமிழின் நடை தாக்கம் சௌராஷ்ட்ரி மொழியில் ஏற்பட, ஏற்பட, பல்வேறு சௌராஷ்ட்ரா வார்த்தைகள் பயன்பாடு குறையத்துவங்கியது.  தாம் பேசும் சௌராஷ்ட்ரி மொழியில் பல தமிழ் திரிபுகள் கூடத்துவங்கின .  இதே இட்லி மதுரையில் பலகாரம் என்று அழைக்கப்பட்டதன் மறுவலாக சௌராஷ்ட்ரியில் பலார்  என்று அழைக்க துவங்குவதை இங்கு குறிப்பிடலாம்.  உண்மையில் சௌராஷ்ட்ரி மொழியில் பலார்  என்பது காரம், மற்றும் இனிப்பு வகைகளை குறிக்கும். மொழிநடை மாற்றத்தினால் பெரும்பான்மை மொழி சூழல் வேறுமாதிரி இருந்த காணத்தினால் அநேக சௌராஷ்ட்ரா வார்த்தைகள் மறக்கப்பட்டது .  புழக்கத்தில் இருந்து மறைந்தன. உதாரணமாக விளக்கு பொருத்து  - என்பதை சௌராஷ்ட்ரி நடையில் திவோ லாவ் என்று சொல்லும் வழக்கம் விடுபட்டு திவோ பொர்வி என்று தமிழ் வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்த்து பயன்படுத்துவது வழக்கமாக ஆகிவிட்டது !  மேற்படி இந்த  " விளக்கு பொருத்து " மொழிபெயர்ப்பு எப்படி இருக்கிறது என்றால் " Management " என்பதை "மேலாண்மை" என்று மொழிபெயர்த்தது போல நகைப்புக்கு இடமானது தான்.   ஒலி ஓசை ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒன்று போல தெரிகிறது தவிர இந்த மேலாண்மைக்கும், Management என்ற வார்த்தைக்கும் எந்த பொருத்தமும், சம்பந்தமும் இல்லை !!   இப்படி குழப்பங்கள் நிறைந்த இந்நிலையில் குஜராத் சென்று சௌராஷ்ட்ரி மொழியை  ஆராய்வது என்பது சுலபமான வேலையா ?  எத்தனை மொழியியல் அறிஞர்களின் கால விரயத்தை இது எடுத்துக்கொள்ளும் ? ! 
கொஞ்சம் வரலாற்றினை அறிவதில் இருந்து ஆரம்பிப்போம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு மொழிவாரி மாகாணம் பிரிக்கப்பட்டபோது, எல்லா மாகாணங்களும்;   தத்தம் மாகாண மொழியை மேம்படுத்தி தனித்து காட்ட முயற்சித்தன.  இப்படி தமிழகத்தில் எடுத்த முயற்சி; வடமொழி கலப்பு என்று சில எழுத்துக்கள், வார்த்தைகளை  நீக்கி விட்டு தமிழை எழுதுவது.  பேச்சிலும் இந்த சீர்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவருவது என்று பல முயற்சிகள் நடைபெற்று உள்ளன.  
அதே போல குஜராத்தி மொழியை தனித்து காட்ட, குஜராத்தின் பல்வேறு  வட்டார  வழக்குகள் பரிசீலிக்கப்பட்டன.  அவற்றுள் சௌராஷ்ட்ரா மலைப்பகுதியான, கிர்னார் என்ற வட்டார வழக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு , அதுவே "ஸ்டாண்டர்ட் குஜராத்தி மொழி" என்று மேம்படுத்தி அம்மாநில அரசு பாட திட்டத்தில் கொண்டுவந்து கற்பித்தது. மற்ற  வட்டார வழக்குகள் பேச்சு மொழியாகவே நின்று விட்டன.  ஆகவே பேச்சு வழக்கில் இருக்கும் மற்ற வட்டார வழக்குகளை ஆராய நமக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது.  நாம் இத்தனை நூறு  வருடங்கள் கழித்து, தமிழகத்தில் இருந்து குஜராத் சென்று ஆராய்ச்சி செய்யும்போது இவைகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.  நிறைய பார்சி மொழி வார்த்தைகள் குஜராத்தி மொழியில் செயற்கையாக சேர்க்கப்பட்டதன் விளைவு, சௌராஷ்ட்ரா மொழிக்கும், மராத்தி மொழிக்கும் அதிக ஒற்றுமை உள்ளது போலவும் குஜராத்தி மொழிக்கும் தமிழக சௌராஷ்ட்ரி மொழிக்கும் குறைந்த ஒற்றுமையே உள்ளது போலவும் தோற்றம் உண்டானது.  இன்றைய காலகட்டத்தில் உண்மையும் அதுவே.  
இது ஒரு புறம் இருக்க தமிழகத்தில் நாம் பயன்படுத்தும் சௌராஷ்டிர மொழியில் தெலுங்கு, தமிழ், கன்னட, ஆங்கில மொழிகளின் தாக்கம் உள்ளது.  இந்நிலையில் ஒரு வார்த்தை முற்றிலும் சௌராஷ்ட்ரா மொழி வார்த்தையே  என்பதை அறிய, அவ் வார்த்தையை தென்னிந்திய மொழிகளில்  உரசி, ஒப்பீடு செய்து, வேறு மொழிகளில் இருந்து கடன் வாங்கப்பட்டதா என்று  பார்த்து; பின்னரே இது சௌராஷ்ட்ரா மொழி வார்த்தை என்று உறுதிப்படுத்த வேண்டி உள்ளது.  
இப்படி எல்லா வார்த்தைகளையும் நாம் உரசிப் பார்த்து உறுதிப்படுத்தி விடலாம் என்றால் அதுவும் மிகப் பெரிய தடையை சந்திக்கிறது.  அது என்ன ?
## ஒரு சௌராஷ்ட்ரி மொழி வார்த்தை.  அதை; நாம்,  ' நம் முழு வாழ்நாளில்' ஒரு முறை மட்டுமே பயன் படுத்துகிறோம் !!  மேலும் அவ்வார்த்தையை ஒரே ஒரு வாக்கியத்தில் மட்டும், ஒரே ஒரு குறிப்பிட்ட சூழலில், ஒரே ஒரு குறிப்பிட்ட நடையில் மட்டுமே வாழ் நாள் முழு தமிழக சௌராஷ்ட்ரா மக்கள் பயன் படுத்துகின்றனர் !!!
என்ன.... ? ஒரு வார்த்தையை, வாழ்நாள் முழுவதிலும் ஒரே ஒரு முறை தான் உபயோக்கிறோமா ! ? ! ஆம் !!!
இதற்கு காரணம் என்ன ?  நீங்களாகவே இதற்கு காரணம் என்ன என்று சிந்திக்க ஆரம்பித்தது விட்டால் , நீங்கள் சௌராஷ்ட்ரி மொழி பண்டிதராக தகுதி உடையவர் என்று உங்களுக்கு நீங்களே பாராட்டு தெரிவித்தது கொள்ளுங்கள்.  அந்த வார்த்தையின் உண்மையான முழு அர்த்தமும் தமிழக சௌராஷ்ட்ரா மொழி பேசும் மக்களுக்கு தெரியாததே இதன் காரணம்.
ஆதாரத்துடன் சொல்லுகிறேன்.

உதாரணமாக : "சம்பி" - என்ற சௌராஷ்ட்ரி வினைச் சொல்.  

ஒரு சௌராஷ்டிரன் தனது வாழ்நாள் முழுவதிலும் இந்த வார்த்தையை  உபயோகப்படுத்தும் ஒரே ஒரு வாக்கியம் " காய் தும்ரே  அம்பா செந்த  ஜீ சம்பிலிடிர்த்தே ? "  
இந்த வார்த்தை உபயோகப்படுத்தும் ஒரே சூழல் : சிறுகுழந்தை , தனது தாயை இறுக்கி பிடித்துக்கொண்டு இருத்தல்.  பிறர் யார் அழைத்தாலும் அவர்களிடம் செல்ல மறுத்து தாயை இறுக்கி பிடித்துக்கொண்டு இருத்தல்.  இந்த சூழ்நிலையில் மட்டுமே இந்த "சம்பி" என்ற வினைச்சொல்லை உபயோகித்து நாம் ஒரு வாக்கியம் பேசுகிறோம்.  வேறு எங்காவது உண்டா ? ! 
ஏன் வேறு எங்கும் சம்பி  உபயோகப்படுத்துவது இல்லை!  ஏன்  என்றால், இந்த வார்த்தையின் உண்மையான முழு அர்த்தமும் நமக்கு தெரிவதில்லை.  இதனை மேம்படுத்துவது தான் " சௌராஷ்ட்ரா மொழித்திறன் மேம்பாடு ".
..... ஓ  அப்படியா ! ? ! ......
சரி ... எந்தெந்த வழியில் சௌராஷ்ட்ரி மொழித்திறனை மேம்படுத்துவது ? 
இந்த சம்பி  வார்த்தையையே எடுத்துக்கொள்வோம்.  இதனை குஜராத்தி, மராத்தியில்   பயன்படுத்துகிறீர்களா ? என்று பார்க்க வேண்டும்.  இல்லை என்றால் சமஸ்கிருதத்தில் இந்த வார்த்தை உள்ளதா ? இருந்தால் அது எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது ? என்று பார்க்க வேண்டும்.  
அப்படி ஒப்பு நோக்கி பார்த்த பின், இது குஜராத்தி, மராத்தி மொழிகளில் பயன்படுத்துவது இல்லை, தமிழ், தெலுகு, கன்னட மொழியிகளின் இந்த வார்த்தை இல்லை என்று கண்டுபிடித்து விட்டோம் .   இனி சம்ஸ்கிருதத்தில் பார்த்தால் அங்கும் இல்லை !! ஆனால் இதற்க்கு நிகரான, பண்பு பெயர் சொல்    ஒன்று சம்ஸ்கிருதத்தில் உள்ளது என்று கண்டு பிடித்து விட்டோம்...  सङ्कुल saGkula mixed or mingled   என்பதே அந்த வார்த்தை.  இந்த  குறிப்பை (clue ) கொண்டு  இந்த சம்பி  வார்த்தையின் அர்த்தம் " கலத்தல்  - Mingle " என்று அறிகிறோம்.  அதன் சம்ஸ்கிருத நிகர் வார்த்தை  saMyu  संयुते join to another என்றும் தற்போது கண்டு பிடித்து விட்டோம்.
சம்பி  - என்ற சௌராஷ்ட்ரி வார்த்தைக்கு " கலத்தல் - Mingle  "  என்று கண்டறிந்த பின்னர், கலத்தல் , ஒருகூடல் , ஒட்டிபிடித்தல்  போன்ற வார்த்தைகளின் பிரயோகம் தேவை ஏற்படும் இடங்களில் சம்பி  என்ற வார்த்தையை உபயோகித்தல்.  இதனை திறனுடன் செய்தல்.  இதுதான்  சௌராஷ்ட்ரி மொழித்திறன் மேம்பாடு.  இப்படி, வார்த்தை பிரயோகம் உணர்வு, மற்றும்   அறிவுப்  பூர்வமாக, இல்லாவிட்டால்-வெறும் மனப்பாடம் செய்ததை ஒப்புவித்து போலவே நமது பேச்சு மொழி இருக்கும். பெற்றோர், முன்னோர் மூலம் நாம் அறிந்து கொண்ட சௌராஷ்ட்ரி வார்த்தைகளை அதே சூழலில் மட்டும் திரும்ப ஒப்புவிக்கும்; உணர்வு-வெளிப்பாடு குறைந்த மொழியையே நாம் பேசிக்கொண்டு இருப்போம்.
முயற்சி செய்வோம்.  நமது முன்னோர்கள் விட்டு சென்ற கலாச்சார அடையாளங்களில் நம்மிடம் மிஞ்சி இருப்பது மொழி மட்டுமே !   மொழியும்  இல்லை என்றால் நாம் சௌராஷ்டிரர் என்று கூறிக்கொள்ள என்ன ஆதாரம் இருக்கிறது நம்மிடம் ?

நமது மொழி நடை மாறி விட்டது என்பதற்கு உதாரணம் இருக்கிறதா ? இருக்கிறது !

கொம்ள  - அல்லது கொம்ளோ என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம்.  இந்த வார்த்தையில் இருந்து பிறந்தது " கொம்மன் " என்ற வார்த்தை.  கொம்மன் என்றால் என்ன ?  சரியான அர்த்தம் பலருக்கு தெரியாது.
இந்த வார்த்தையை நாம் உபயோகப்படுத்தும் ஒரே ஒரு சூழல், "  தெய்  கொம்மன் கன்  ஸே  "  தமிழில் " கொம்மன் " என்ற வார்த்தைக்கு இணையான வார்த்தை இல்லை.  எனவே நாம் இவ் வார்த்தையை , தமிழின் மொழி நடை நம் மீது ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தினால் மேற்கண்ட ஒரே ஒரு வாக்கியம் தவிர வேறு இடங்களில் பயன்படுத்துவது இல்லை ! ஏன் ?  நாம் தமிழகத்தில் பேசுவது, தென்னிந்திய மொழிகளின் நடைத்தாக்கம் கொண்ட மொழி நடையே .
சரி.  " கொம்மன் " என்றால் அதன் அர்த்தம் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது.  கொம்மன் என்றால் அதன் ஆங்கில நிகர்ச் சொல் " பிரெஷ்" (Fresh ). !இதனை நம்மில் எத்தனை பேர்; இனி மேற்கொண்டு நமது சௌராஷ்ட்ரி மொழிப் பேச்சு வழக்கில், நடைமுறைக்கு கொண்டு வந்து, " கைலான் கொம்மன் ஸே , பள்ளான்  கொம்மன் ஸே " என்று  பேச்சு வழக்கில் நடைமுறையில் கடைபிடிக்க ஆரம்பிக்கிறோமோ, அப்போதில் இருந்து நாம் சரியான திசையில் செல்கிறோம்,  சௌராஷ்ட்ரி மொழித்திறன் நமக்கு மேம்பட்டு வருகிறது என்று புரிந்து கொள்ள ஆரம்பிக்கலாம்.
இன்னும் அதிக மொழித்திறன் இருப்பவர்கள்,  " கொம்ள " என்பதில் இருந்து " கொம்மன்" உருவாக்கி இருப்பதை முன்னோர் கொடுத்த முன்னுதாரமாக வைத்துக்கொண்டு, சௌராஷ்ட்ரி மொழியில் புதிய கலைச்சொற்களை உருவாக்க  முயற்சிக்கலாம்.
மற்றுமொரு விசித்திரம் உள்ளது.  இதுவும் மொழியின் நடை மாற்றத்தால் உருவானது.  இந்த வினைச்சொல் முற்றிலும் பெண்கள் மட்டுமே உபயோகப்படுத்துவர்.  பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் அந்த சௌராஷ்ட்ரி வார்த்தை " புஜ்ஜிவைஜிஸ் " (bujvaijis ) ( बुज् वै जिस् )  ( consealed ) என்பதாகும்.  ஒரு சிறுமிக்கு சிறுவயதிலேயே காது குத்தும் சடங்கு நடைபெற்று விடுகிறது.  அந்த சிறுமி சிலகாலம் ஏதோ ஒரு காரணத்தால் காதணி (ear -ring ) அணியாமல் விட்டுவிடுகிறாள்.  அதுமாதிரியான காலங்களில் காதில் ஆபரணம் அணிய உருவாக்கப்பட்ட  துளை அடைத்துக்கொண்டு விடுகிறது.  பின்னர் காதணி அணிய முற்பட்டால் காது வலி எடுக்கிறது.  அதுமாதிரி சமயங்களில் " கான் பு3ஜ்வைஜிஸ் " என்று கூறி உணர்வை, அல்லது செய்தியை வெளிப்படுத்து கிறார்கள்.  வேறு சமயங்களில் பல்வேறு இடங்களில் எலி வளையோ, அல்லது கதவு தாள்பாழ்  நுழையும் துளையோ தூர்ந்து  போய்  அடைத்துக் கொண்டால் " ஹுந்தீ3ர்  பு2ட்டோ  புஜ்ஜிவைஜிஸ் " என்றோ அல்லது " கவாட்3  கீ2ள்  பு2ட்டோ பு3ஜ்ஜிவைஜிஸ் " என்றோ பேசுவதை கேட்டது உண்டா ? இல்லை !! ஏன் எனில் நமது சௌராஷ்ட்ரி மொழி ஆளுமை என்பது, முன்னோரிடம் இருந்து கற்ற வார்த்தைகளை, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே வெளிப்படுத்தும் திறன் மட்டும் பெற்றுள்ளோம்.  சூழ்நிலை மாறினால் தமிழ் அல்லது ஆங்கில வார்த்தைகளையே உபயோகப்படுத்துகிறோம்.
இதனால் தான், வழக்கொழிந்து வரும் சௌராஷ்டிர வார்த்தைகளை வயதில் மூத்த  பெரியோர்களிடம் இருந்து பெறுவது மிக கடினமாக இருந்தது.  எனவே; ஒரு தமிழ் அல்லது ஆங்கில வார்த்தையை கூறி , இதற்கு சௌராஷ்டிர மொழியில் என்ன வார்த்தை உபயோகிப்பது என்று மூத்தோர்களிடம் கேள்வி கேட்டால் திருதிரு என முழிப்பர்.!  இப்பிரச்னைக்கு நான் கண்ட தீர்வு ... வயதில் மூத்தோர்களிடம் போய் அமர்ந்து கொள்ள நான்கைந்து மணி நேரம் அவகாசம் உள்ளதா என்று பார்த்துக் கொண்டு பின்னர் சென்று அமர்வேன்.  அவர்களின் பழைய  நினைவுகளை லேசாக கீறி விடுவேன்.  பின்னர் அவர்கள் பேச ஆரம்பித்த பின் நான் மௌனமாய் அனைத்தினையும் கேட்டுக் கொள்வேன்.  சில மணி நேரங்களுக்கு பிறகு இறுதியில் ஒன்றோ இரண்டோ என் சமகால மக்களிடம் கேட்டு அறியாத, புதிய வார்த்தைகள் கிடைக்கும்.  அதனை உடனே குறித்துக் கொள்வேன்.  அவை புதிய வார்த்தை அல்ல, பன்னெடுங்காலம் உபயோகத்தில் இருந்தது தான்.  ஆனால் எனக்கு, என் தலைமுறைக்கு புதியது போல தோன்றுகிறது. காரணம் நம் தலைமுறை அந்த வார்த்தையை பேசுவதும், கேட்டதும் இல்லையே !!!  பின்னர் இந்த வார்த்தை எனக்கு புதிதாக உள்ளது, இதன் அர்த்தம் சரிதானா என்று பாருங்கள் என்று, அவர் பேசிய வார்த்தையை  அவரிடமே  திருப்பி கூறினால். நானா இந்த வார்த்தையை பேசினேன் ? ! என்று நம்மிடமே சில சமயம் திருப்பி கேட்பார்.  !! ஏன் எனில் ஒரு குறிப்பிட்ட சூழலில் அந்த வார்த்தையை வெளிப்படுத்த தெரிந்த அவருக்கு அவ்வார்த்தையின் முழு அர்த்தமும் புரிந்து கொண்டு வெளிப்படுத்த தெரியாதவர்  .  இதனால் அந்த புதிய வார்த்தையை எழுதி வைத்துக்கொண்டு, தமிழ், தெலுகு, கன்னடத்தில் இருந்து கடன் வாங்கிய வார்த்தையா? என்று பார்த்து கழித்து கட்டி பின்னர் மிச்சம் இருக்கும் வார்த்தையை குஜராத்தி, மராத்தி, சம்ஸ்கிருதம் மொழிகளில் உள்ளதா ? அப்படி இருக்குமாயின் அம்மொழிகளின் என்ன அர்த்தத்தில் உபயோகப்படுத்துகின்றனர் என்று அறிந்து கொண்டு , நான் அவ்வார்த்தையை அறிந்து கொண்ட பெரியவர், என்ன அர்த்தத்தில் பேசினார் என்பதை ஒப்பீடு செய்து பார்த்து பின்னர் அது சௌராஷ்ட்ரி மொழி வார்த்தை தான் என்று அறுதியிட்டு முடிவு செய்து சௌராஷ்ட்ரி சொற்களஞ்சியத்தில் சேர்த்துக் கொள்வேன்.